இன்றைய பொழுது இசைமணி யூசுப் அவர்களின் மறைவுச்செய்தி கேட்டு மனம் கனத்தது.
நான் சென்னையில் படித்த பள்ளிக்கூடத்தில் சில காலம் எங்களுக்கு இசை ஆசானாக இருந்தார். நாகூரை பூர்விகமாக கொண்ட இவர் வசித்து வந்தது சென்னை , பல்லாவரத்தில்.

கர்னாடக இசையுலகில் ஜாம்பாவானாக போற்றப்பட வேண்டியவர். குறிப்பாக இஸ்லாமியப் பாடல்களை கர்னாடக இசையில் பாடி முன்னோடியாகத் திகழ்ந்த நாகூர் தர்கா வித்வான் இசைவாணர் எஸ்.எம்.ஏ.காதருக்கு அடுத்தபடியாக இசையுலகில் முத்திரை பதித்தவர் இவர்.

இசைவாணர் எஸ்.எம்.ஏ.காதர் அவர்களால் உருவாக்கப்பட்ட மாணவர்களில் முதன்மையான சீடர் “இசைமணி” எம்.எம்.யூசுப் அவர்கள்.

இவர் சென்னை அண்ணாமலை மன்றத்தில் ‘இசை மணி’ என்ற பட்டம் தந்து சிறப்பிக்கப் பெற்றார். அச்சமயம் இவருடன் அதே மேடையில் “இசைமணி” பட்டம் பெற்றவர்களில் சீர்காழி கோவிந்தராசனும் ஒருவர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மாண்புகளை எடுத்தியம்பும் எத்தனையோ இஸ்லாமியப் பாடல்கள் உண்டு. இஸ்லாமியப் பாடல்கள் என்றாலே எட்டுகட்டைச் சுதியில், ஊசி உடைகிற உச்ச ஸ்தாயியில்தான் பாட வேண்டும் என்பது எழுதாத ஒரு சட்டம் ஆகி விட்டது. நாகூர் E.M.ஹனீபா, காயல் சேக் முஹம்மது, ஜெய்னுல் ஆபிதீன், ஹஸன் குத்தூஸ் உட்பட எல்லோரும் இதே பாணியைப் பின்பற்றியவர்கள்தாம்.

மென்மையான இசையிலும் இஸ்லாமியப் பாடலை முழங்கலாம் என்ற பாணியை பின்பற்றியவர். அதற்கு மாறாக நாகூர் எம்.எம். இசைமணி யூசுப் அவர்களின் சாந்தமான சங்கீதம் கலந்த குரலில் மெல்லிசையைக் கேட்பதென்றால் அது ஒரு சுகமான அனுபவம். தென்றல் மிதந்துவரும் கீதம் நம் உள்ளத்தின் ஆழம் வரை வந்து ஊடுறுவிப் போகும். இசைமணி பாடிய ஒரு பாடல்; அது எத்தனை முறை கேட்டாலும் அலுப்பு தட்டாது.

//மண்ணகத்தின் இழிவு மாற்றி
விண்ணகத்தின் உயர்வு சாற்றி
பொன்னகத்தில் அண்ணல் நபி வந்தார்; – அவர்
தன்னகத்தில் சாந்தியின்பம் தந்தார்//

என்ற நினைவில் நிற்கும் அருமையான பாடலை இயற்றியது கவிஞர் திலகம் சாரணபாஸ்கரன் அவர்கள்.

கர்நாடக இசை முறையாகப் பயின்று இசை மணி பட்டம் பெற்றவர். இசைத் துறையில் தனக்கென்று ஒரு பாணியை வளர்த்துக் கொண்டவர்.

இலங்கை, சிங்கப்பூர், மலேசியா போன்ற வெளிநாடுகளுக்கெல்லாம் சென்று இசைக் கச்சேரிகளை நடத்தியிருப்பவர்.

//தமிழறிஞரும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தலைவருமான காலஞ்சென்ற ‘சிராஜுல் மில்லத்’ அப்துஸ் ஸமதை தனது குரலால் உணர்ச்சிவயப்பட வைத்து கண்ணீர் சிந்த வைத்ததைத் தன்னைப் பெரிதும் பாதித்த சம்பவம் ஒன்றை இசைமணி யூசுப் நினைவு கூர்ந்ததை எழுதுகிறார் இக்வான் அமீர்.

இலங்கையைச் சேர்ந்த புரட்சி கமாலின் திருக்குர்ஆனைப் பற்றிய பாடல்தான் அது! “சமத் சாஹெப் இறப்பதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னால் அவரது அலுவலகத்தில் வைத்து அந்தப் பாடலைப் பாடச் சொன்னார். “வையகத்தின் மணிவிளக்கே’ எனத் தொடங்கும் அப்பாடலை நான் பாடப் பாட தலைவர் உணர்ச்சிவயப்பட்டு அழ ஆரம்பித்தார்கள். இடையில் மாலைப்பொழுது மக்ரிப் தொமுகை வந்தது.

தொழுகைக்காகப் பாடலின் இறுதி வரிகளைப் பாடாமல் நிறுத்திவிட்டேன். தொழுது முடித்துவிட்டு வந்ததும் தலைவர் மீண்டும் கவனமாக அந்த இறுதி அடிகளை எடுத்துக் கொடுத்துப் பாடச் சொன்னார்” என்று இசைமணி யூசுப் நினைவு கூர்ந்தது நம்மை நெகிழ வைக்கிறது.

நீதிபதி கிருஷ்ணசாமி ரெட்டியார், இசைமணி சீர்காழி கோவிந்தராசன் போன்றவர்களால் மிகவும் சிலாகித்துப் பேசப்பட்டவர் நம் இசைமணி அவர்கள்.

அவருடைய மறைவு இசையுலகிற்கு மாபெரும் இழப்பு என்பதில் ஐயமில்லை. அன்னாரின் பாவங்களை மன்னித்து இறைவன் அவருக்கு சுவர்க்கத்தில் உயர் ஸ்தானத்தை அருளட்டும்.

#அப்துல் கையூம்

https://m.facebook.com/story.php?story_fbid=4891534164199248&id=100000281373744&sfnsn=wiwspwa